மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி: 3 கிராம மக்கள் சாலை மறியல்

கொடைரோடு அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 3 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-30 21:30 GMT
கொடைரோடு, 

கொடைரோடு அருகேயுள்ள பள்ளப்பட்டி ஊராட்சியில் கவுண்டன்பட்டி, ராமன் செட்டிபட்டி, கவுண்டன்பட்டி காலனி ஆகிய 3 கிராமங்களுக்கான மயானம் அகரன்குளம் கரையோரத்தில் உள்ளது. இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், நிலக்கோட்டை தாசில்தார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். இதையடுத்து நேற்று மயானத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக கிராம மக்கள் யாரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர்.

ஆனால் மயானத்தை அளவிட அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 3 கிராம மக்கள் திரண்டு சென்று மதுரை-வத்தலக்குண்டு சாலையில் பள்ளப்பட்டியில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மயான ஆக்கிரமிப்பு நீண்ட மாதங்களாக அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதுதவிர 3 கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இதையடுத்து மயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், கிராமங்களிலும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்