சிவகிரி அருகே உருட்டு கட்டையால் தாக்கி மின் வாரிய பெண் ஊழியர் படுகொலை; கணவர்– மாமியார் வெறிச்செயல்

சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி அவருடைய கணவர் மற்றும் மாமியார் படுகொலை செய்தனர்.

Update: 2018-10-19 23:15 GMT

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்திபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி, அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

திருமணம் முடிந்து தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்து உள்ளார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தமிழ்மணியின் வீட்டில் அவருடைய நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரும் தங்கி இருந்து உள்ளார்.

நேற்று முன்தினம் விவாகரத்து வழக்கு தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் லோகநாதன் ஆகியோர் பேசியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் 4 பேருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து ஜோதிமணியை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

இதுபற்றி அறிந்ததும் சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்