பேட்டையில் இருதரப்பினர் இடையே மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நெல்லையை அடுத்த பேட்டையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2018-08-22 21:00 GMT
நெல்லை, 

நெல்லையை அடுத்த பேட்டையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

3 பேருக்கு அரிவாள் வெட்டு 

நெல்லை பழைய பேட்டையில் இருபிரிவினர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு பிரிவினர்களிடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அரிவாளால் ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் அதே பகுதியை சேர்ந்த வினோத் (வயது 18), ஆனந்த் (22), துரைராஜ் (23) ஆகிய 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எதுவும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முற்றுகை 

இந்த நிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட 3 பேர்களின் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், “3 பேரை அரிவாளால் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்