திருடியதாக குற்றச்சாட்டு: போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை அதிகாரிகள் மீது மனைவி புகார்

குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் திருடியதாக குற்றம் சாட்டியதால், போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். இதையடுத்து அதிகாரிகள் மீது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2018-08-21 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே செறுக்கோல் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது45), தொழிலாளி. இவருடைய வீட்டின் அருகே குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 2 மூடை பிளீச்சிங் பவுடரை காணவில்லை.

அதை ஜெகன் திருடியதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த ஜெகனை போலீசார் தேடினர். ஆனால், தான் அதை திருடவில்லை என ஜெகன் அதிகாரிகளிடம் கூறி வேதனைபட்டு வந்தார். போலீஸ் தன்னை தேடுவதை அறிந்ததும் ஜெகன் தலைமறைவானார். அத்துடன், திருட்டு பட்டம் கட்டியதால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்து வீட்டில் ஜெகன் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக  இறந்தார்.

இதையடுத்து ஜெகனின் மனைவி சித்ரா திருவட்டார் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–

எனது கணவர் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் திருடியதாக அதிகாரிகள் போலீசுக்கு தவறான தகவல் கொடுத்தனர். இதனால், மனமுடைந்த ஜெகன் தற்கொலை செய்து கொண்டார். எனவே, எனது கணவரின் சாவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்