வில்லிவாக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவர் பலி

வில்லிவாக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தில் வலு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மாணவர், இரும்பு எடை உருளை தலை மற்றும் மார்பில் விழுந்ததால் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-05-30 23:15 GMT

அம்பத்தூர்,

சென்னை வில்லிவாக்கம் அகஸ்தியர் நகர், 34–வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 44). இவர், கொரட்டூர் மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் மோகனசுந்தரம்(15). இவர், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு முடித்து உள்ளார். இறுதித்தேர்வில் 420 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து இருந்தார்.

கடந்த ஒரு மாதமாக மோகனசுந்தரம், வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் அருகில் உள்ள வினோத்குமார்(32) என்பவருக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தில் கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி செய்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்தில் வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இரும்பால் ஆன எடை உருளை அவரது கை நழுவி தலை மற்றும் மார்பு பகுதியில் விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை, அங்கு உடற் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர், மாணவர் மோகனசுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், பலியான மாணவர் மோகன சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தின்போது உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 10–க்கும் மேற்பட்டவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்