தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-30 23:00 GMT

மதுரை,

அனைத்திந்திய வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடந்துள்ளது. எனவே தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகிய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுபோல், தூத்துக்குடியை சேர்ந்த கந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்