காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபாட்டில்கள்-200 லிட்டர் சாராயம் பறிமுதல் 2 பேர் கைது

திட்டச்சேரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 480 மதுபாட்டில்கள், 200 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-05-19 22:15 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்தப்படுவதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் திட்டச்சேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருப்புகலூர் மெயின்ரோடு ஆர்ச் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் அட்டை பெட்டிகளில் 480 மதுபாட்டில்களும், 200 லிட்டர் சாராயமும் இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே காரில் வந்த 3 பேரில் ஒருவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார், காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சர்ச் தெருவை சேர்ந்த சர்புதீன் மகன் அப்துல்ஹக் (வயது28), கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். காலனி தெருவை சேர்ந்த செல்வமாரி (26) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

மதுபாட்டில்கள்- சாராயம் பறிமுதல்

இதை தொடர்ந்து போலீசார், 480 மதுபாட்டில்களையும், 200 லிட்டர் சாராயத்தையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ஹக், செல்வமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய விழுதியூரை சேர்ந்த வேலாயுதம் மகன் பாஸ்கரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்