சேலம் அண்ணா பூங்காவில் ரூ.80 லட்சத்தில் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சேலம் அண்ணா பூங்காவில் ரூ.80 லட்சத்தில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2018-04-29 23:00 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பூங்காவில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சேலத்தில் கடந்த 30.9.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அண்ணா பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோருக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டது.

இதையடுத்து பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் வெண்கல முழுஉருவ சிலையோடு மணிமண்டபம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சேலம் அண்ணா பூங்காவில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 2,100 சதுரடி பரப்பளவு நிலத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமிபூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணிமண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து அவர் அங்கு புதிதாக அமைய உள்ள மணிமண்டபத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட்டார். விழாவில், எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி, சித்ரா, ராஜா, மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், சேலம் ஒன்றிய செயலாளர் டி.என்.வையாபுரி, முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், மாமாங்கம் ஏ.செங்கோட்டையன், ஏ.கே.ராமச்சந்திரன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சருக்கு சேலம் 4 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் வழிநெடுக நின்றுகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்