குழந்தையை கடத்த வந்ததாக பெண், டிரைவர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

குடியாத்தம் அருகே குழந்தையை கடத்த வந்தவர்கள் என நினைத்து பெண், வட மாநில லாரி டிரைவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

Update: 2018-04-29 21:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த உள்ளி ஆத்தோரம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசி உள்ளார். இதனால் அந்த பெண், குழந்தையை கடத்த வந்துள்ளதாக நினைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அந்த பெண் காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபு, செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவருக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர், உளுந்தூர்பேட்டையை அடுத்த அரசூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி சொக்கம்மா (வயது 40) என்பதும், வீட்டில் கோவித்து கொண்டு வெளியே வந்ததும் தெரியவந்தது.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து குடியாத்தத்தில் உள்ள ஒரு கடைக்கு ஜிப்சம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. நேற்று முன்தினம் இரவு குடியாத்தத்தை அடுத்த ராமாலை கிராமம் அருகே லாரி வந்தபோது, லாரி டிரைவர் அந்த கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், இரவு நேரம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மூட்டைகளை இறக்கி கொள்ளலாம் எனவும், அப்பகுதியிலேயே லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுங்கள் என கூறியுள்ளார்.

அதன்படி, டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, இரவில் அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை கண்ட கிராம மக்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் இருந்ததால் பிடித்து விசாரித்த போது இந்தியில் பேசி உள்ளார். அவர் பேசியது கிராம மக்களுக்கு புரியாததால் அந்த நபர் திருட்டு அல்லது குழந்தை கடத்தல் சம்பவத்திற்கு வந்திருப்பார் என நினைத்து அவரை தாக்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்