சாலை தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது; 5 பேர் காயம்

கோவளம் அருகே சாலை தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதியதில் நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-04-29 21:45 GMT
திருப்போரூர்,

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை பனையூரை சேர்ந்த டிரைவர் ஜெயராமன்(வயது32) என்பவர் ஓட்டினார்.

பஸ் திருப்போரூரை அடுத்த கோவளம் சந்திப்பை நெருங்கும் போது திடீரென்று சாலையில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று குறுக்கிட்டது. உடனே டிரைவர் இரண்டு சக்கரவாகனம் மீது மோதாமல் இருக்க பஸ்சை வலது புறம் திருப்ப முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் தடுப்பு சுவரில் வேகமாக மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த மலர்க்கொடி (40), புதுச்சேரியை சேர்ந்த பங்காரு (45), அவருடைய மனைவி சசிகலா (43,) சூளைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32), டெல்லி சதீஷ் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி தப்பினர்.

இந்த விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்