கல்லூரிக்கு மாணவர்கள் சென்றதை பெற்றோர் அறிந்துகொள்ள வசதி: அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

தாகூர் கலைக்கல்லூரிக்கு மாணவர்கள் சென்றதை பெற்றோர்கள் அறிந்துகொள்ள வசதியாக வருகைப்பதிவேடு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

Update: 2018-03-07 22:00 GMT
புதுச்சேரி,

தாகூர் கலைக்கல்லூரியில் பசுமை வளாக திட்டத்தின் ஒருபகுதியாக அலங்கார செடிகள், பழ மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டன. அதனை தொடர்ந்து திறன்மிகு வகுப்பினை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) திறந்து வைத்து ஜெனரேட்டரை இயக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வியை அளிக்கும் முறை இந்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உறவு மேம்படும். இத்திட்டத்தின் மூலம் முதலாம் ஆண்டு மாணவர்களின் முழுவிவரங்களையும் வகுப்பாசிரியர் பெற்றுக்கொண்டு அந்த மாணவர் கல்வியில் செலுத்தும் அக்கறை, அவர்களது பெற்றோர் வாழும் சூழல் ஆகியவற்றை அறிந்து கண்காணிப்பார்கள். இத்திட்டம் அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

தாகூர் கல்லூரியில் ஆசிரியர்கள் குழு அதை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாது தாகூர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. விளையாட்டு, கலை ஆகியவற்றிலும் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மாணவர்களின் சீர்கேடு, படிப்பில் பின்தங்குவது ஆகியவற்றுக்கு முக்கிய காரணம் அவர்கள் வகுப்புகளுக்கு முறையாக செல்லாமல் இருப்பதுதான். ஒழுங்காக வகுப்புக்கு வந்தாலே படிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதற்காகவே மாணவர்களின் வருகைப்பதிவேட்டை கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதன் மூலம் தங்கள் பிள்ளைகள் கல்லூரிக்கு சென்றார்களா? என்பது குறித்து பெற்றோர் அறிந்துகொள்ளலாம். மேலும் கல்லூரி வளாகத்தை பசுமையாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். 

மேலும் செய்திகள்