துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி தங்க கட்டிகள் பறிமுதல், 2 பேர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-27 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு நாகையை சேர்ந்த முகமது மைதீன் (வயது 41) வந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செல்போன்களுக்கு பயன்படுத்தும் கவர்களில் தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ எடை கொண்ட அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் வந்த கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த அகமது சபீர் (30) வந்திருந்தார். அவரும் செல்போன்களுக்கு பயன்படுத்தும் கவர்களில் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் ரூ.90 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 900 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தங்க கட்டிகளை தந்து அனுப்பியது யார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்