அரக்கோணம் வழியாக கடந்த ஒரு ஆண்டில் ரெயில்களில் கடத்திய 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் வழியாக கடந்த ஒரு ஆண்டில் ரெயில்களில் கடத்திய 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ரஜாக் கூறினார்.

Update: 2017-12-30 22:30 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் மின்சார ரெயில், பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

அதன்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ரஜாக் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் அரக்கோணம், சோளிங்கர், பாணாவரம், திருத்தணி, பொன்பாடி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை அரக்கோணம் வழியாக ரெயில்களில் கடத்திய 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ரஜாக் கூறியதாவது:-

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இரவு, பகலாக ரெயில்களில் கடத்தப்படும் ரேஷன் அரிசியை பிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கும் ஏஜென்சிகள் அதை 20 கிலோ வீதமாக பைகளில் அடைத்து ரெயில் நிலையம் அருகே இரவில் முட்புதர் ஓரமாக மறைத்து வைத்து விடுகின்றனர்.

பின்னர் நள்ளிரவு முதல் ரெயில்கள் மூலமாக ரேஷன் அரிசியை கடத்தி செல்கின்றனர். மொத்தமாக ரேஷன் அரிசி மூட்டையை ரெயிலில் ஏற்றினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதி மின்சார ரெயில், பயணிகள் ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் 10 பைகள் வீதம் ஆங்காங்கே வைத்து கடத்தி செல்கின்றனர். அரிசி கடத்துபவர்கள் பயணிகளோடு பயணிகளாக அமர்ந்து செல்வதால் யார்? அரிசியை கடத்தி செல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் ரெயில்களில் 2 ஆயிரத்து 419 பைகளில் கடத்திய 50 டன் ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ரெயில்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்