தனியாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

வளசரவாக்கத்தில், மளிகை கடையில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-30 00:00 GMT

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், கைக்கான்குப்பம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(42). நேற்று முன்தினம் இரவு கடையில் மகாலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது கடைக்கு வந்த ஒருவர், 500 ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் கேட்டார். மகாலட்சுமியும் அவர் கேட்ட சிகரெட் பாக்கெட்டை எடுத்து கொடுத்தார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், கடையில் இருந்த தேங்காய் உடைக்க பயன்படுத்தும் இரும்பு கம்பியால் மகாலட்சுமியின் தலையில் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் மகாலட்சுமி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து மர்மநபரை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிடிபட்ட நபரிடம் விசாரித்தனர். அதில் அவர், கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்த குமார்(55) என்பதும், ஆட்டோ டிரைவர் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், மகாலட்சுமியை கொலை செய்து விட்டு மளிகை கடையில் இருந்த பணத்தை குமார் கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை இரும்பு கம்பியால் தாக்கினாரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

குமார் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயம் அடைந்த மகாலட்சுமி சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்