ஒரே கட்டிடத்தில் இயங்கும் அரசு பள்ளி; இடநெருக்கடியால் தவிக்கும் மாணவர்கள்

வேனாநல்லூரில் ஒரே கட்டிடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இடநெருக்கடியால் மாணவர்கள் கல்வி பயிலுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பள்ளிக்கு உரிய வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-11-29 22:30 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்து வேனாநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குழந்தைகள் கல்வி கற்க வேண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது பள்ளிக்கென ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டது. அன்று முதல் இதுநாள் வரைக்கும் அங்குள்ள ஒரே கட்டிடத்தில் தான் இந்த பள்ளி இயங்கி வருகிறது.

வகுப்பறையில் தேங்கி நிற்கும் மழைநீர்

தற்போது 1 முதல் 5 வரையுள்ள வகுப்பறையில், சுமார் 65 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே கட்டிடத்தில் இப்பள்ளி இயங்குவதால் மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கி அவதிப் படுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தின் முன்புள்ள சிமெண்டு தளத்தில் ஒரு வருக்கு ஒருவர் நெருக்கடியில் அமர்ந்து சிரமத்தோடு கல்வி கற்கிறார்கள். பள்ளியில் நீளமான அறையில் பலகை வைத்து இரண்டாக பிரித்து உள்ளனர். முதல் பாதியில் 1, 2 வகுப்புகளும், 2-வது பாதியில் 3,4 வகுப்புகளும், 5-ம் வகுப்பு பள்ளி கட்டிடத்தின் வராண்டாவிலும் வைத்து பாடம் நடத்தப்படுகிறது. அதேபோன்று தலைமையாசிரியர் இருக்கையும் பள்ளி வெளி வளாகத்தில்தான் அமைந்துள்ளது. பெய்துவரும் தற்போது வடகிழக்கு பருவ மழையில் மழைநீர் பள்ளிக்குள் புகுந்து மாணவர்கள் அமரும் இடத்தில் தேங்கி நிற்கிறது. இதுபோன்று மழைக்காலத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் புத்தகப்பைகள் நனைந்து பல்வேறு பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலை உள்ளது.

கோரிக்கை

போதிய கட்டிட வசதி இல்லாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் இப்பள்ளிக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி வேண்டும் என்று அப்பள்ளி சார்பில், மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மனு அளித்த சில தினங்களில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு போவதோடு சரி, அதன்பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த பள்ளி அருகே பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி உணவு இடைவெளியில் மாணவர்கள் குளத்தின் அருகே சென்று விடுகிறார்கள். அவ்வப்போது அவர்களை ஆசிரியர்கள் கண்டித்து, எந்நேரமும் அச்சத்துடனே பணி புரிந்து வருகின்றனர். இருக்கின்ற ஒரே கட்டிடமும் பழுதடைந்து உள்ளது. எனவே பெற்றோர்களின் நலன் கருதி, போதிய கட்டிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்