மக்களிடம் ஆசி கேட்டு பயணம் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2018) நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களிடம் ஆசி கேட்டு பயணம் செல்ல இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று அறிவித்தார்.

Update: 2017-11-29 00:06 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டு ஆட்சியை அடுத்த ஆண்டு(2018) நிறைவு செய்ய இருக்கிறது. இதையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் வர இருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் வியூகத்தை வகுத்து உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி நான் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறேன். அதைத்தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் மக்களின் ஆசி கேட்டு பயணத்தை தொடங்க நான் முடிவு செய்துள்ளேன். இது கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆகும். ஆனால் நான் எங்கும் மேளம் அடித்துக் கொண்டு போகமாட்டேன். பா.ஜனதாவினருக்கு வேலை இல்லை. அவர்கள் காற்று வீசிக்கொண்டு இருந்தனர். அதனால் இந்த மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஒருபுறம் கட்சியை பலப்படுத்த வேண்டும். மற்றொருபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல் படுத்த வேண்டும். கோப்புகளை ஆய்வு செய்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் எங்களுக்கு தற்போதைக்கு ஓய்வு இல்லை. அரசு விழாவில் எங்கள் கட்சி தலைவர் பரமேஸ்வர் கலந்துகொள்வது இல்லை. ஆனால் அவர் வரலாம், வராமலும் இருக்கலாம். அது அவருடைய விருப்பம்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்