கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரத்னபிரபா நியமனம்

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரத்னபிரபா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2017-11-28 23:57 GMT

பெங்களூரு,

கர்நாடக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி வருபவர் சுபாஷ்சந்திர குந்தியா. இவர் நாளையுடன்(வியாழக்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு நேற்று பிரிவு உபசார விழா பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்து கொண்டு அவரது சேவையை பாராட்டினார்.

கர்நாடக அரசின் தலைமை செயலாளர் பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடையே கடும் போட்டி எழுந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசின் புதிய தலைமை செயராளராக மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரத்னபிரபாவை நியமித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை செயலாளராக விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமை செயலாளர் ரத்னபிரபா 1981–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவை சேர்ந்தவர். இவர் கடைசியாக மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றியிருந்தார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அவர் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். ரத்னபிரபா கர்நாடகத்தின் 3–வது பெண் தலைமை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கர்நாடகத்தில் ஏற்கனவே அதிகாரம் மிக்க போலீஸ் டி.ஜி.பி. பதவியில் பெண் அதிகாரி நீலமணி ராஜூ அமர்த்தப்பட்டார். இப்போது மாநில அரசு எந்திரத்தை வழிநடத்தும் மிக உயர்வான பதவிக்கு ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் கர்நாடக அரசின் ஆட்சி அதிகாரம் மிக்க முக்கியமான 2 பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்