கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தொல்லியல் சின்னங்களின் புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தொல்லியல் சின்னங்களின் சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

Update: 2017-10-28 07:02 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தொல்லியல் சின்னங்களின் சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் பங்கேற்று, கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்கள் 36 உள்ளன. அதில் தொல்லியல், விலங்கியல், தாவரவியல், இயற்கை வளங்கள் மற்றும் பழமை வாய்ந்த ரெயில்வே அமைப்புகள் ஆகியவை அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காப்பாட்சியர் கோவிந்தராஜ் பேசியதாவது:-

இந்தியாவில் 19 உலக தொல்லியல் மரபு சின்னங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜுனர் தவம் உள்ளிட்ட மாமல்லபுர கோவில்கள் மற்றும் தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் உள்ளிட்ட சோழர்களால் கட்டப்பட்ட பெருங்கோவில்களும் அடங்கும். நமது மரபு சின்னங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. இது குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாரத் சி.பி. எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 600 பேர் பங்கேற்று புகைப்படத்தை பார்வையிட்டனர். இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்