20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினம் கடைசியாக உண்ட உணவு

சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமியில் வாழ்ந்த ஒரு கடல்வாழ் உயிரினம் கடைசியாக உண்ட உணவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2017-10-14 08:47 GMT
இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம், அது உயிரிழக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

‘இக்தியோசார்’ என்று அழைக்கப்படும் அந்த உயிரினம், கடைசியாக சிப்பி மீன்களை உணவாக உட்கொண்டிருந்தது, அதன் இரைப்பை பகுதியில் இருந்த எச்சங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தபோது அது மூப்படையாத இளம் உயிரினமாகவே இருந்துள்ளது.

இந்த வகை ஊர்வனவற்றுள் ஓர் இளம் உயிரினத்தின் தனித்துவம் மிக்க படிமம் ஒன்று கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“அந்தப் படிமத்தின் விலா எலும்புகளுக்கு மத்தியில் கொக்கி போன்ற சிறிய அமைப்புகள் பாதுகாப்பாக இருந்தன” என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீன் லோமக்ஸ் கூறுகிறார்.
“இவை வரலாற்று காலத்துக்கு முன்பு வாழ்ந்த சிப்பி மீன்களின் துடுப்புகள். எனவே அந்த இளம் இக்தியோசார் இறக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு சிப்பி மீன்களே” என்கிறார் அவர்.

இக்தியோசார்களின் சுமார் 1000 படிமங்கள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், இளம் மற்றும் புதிதாகப் பிறந்த இக்தியோசார்களின் படிமங்கள் மிகவும் அரிதானவை யாகவே உள்ளன.
தற்போது படிமமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இளம் இக்தியோசார் 70 செ.மீ. நீளம் உடையதாக இருக்கிறது. டோர்செட் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் படிமத்தின் மண்டை ஓட்டை வைத்து அது இளம் வயதிலேயே உயிரிழந்தது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நைஜல் லார்க்கின், பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் உள்ள லேப்வொர்த் அருங்காட்சியகத்தில் இருந்த இந்த இளம் உயிரினத்தின் படிமத்தின் முக்கியத்துவத்தை ஓர் ஆய்வின்போது அறிந்திருக்கிறார்.

ஆனால், அதுவரை அது எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பதும், அதன் வயது என்ன என்பதும் பதிவு செய்யப்படாமலே இருந்தன.

பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தப் புதை படிமத்துடன் ஒட்டியிருந்த சிறிய பாறைத் துகளை ஆய்வு செய்ததில், அது அதிகபட்சம் 19.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்தனர்.

“பாறை இடுக்குகளில் மறைந்து கிடக்கும் நுண்ணிய புதை படிமங்களைக் கண்டறிந்து ஆராய்வதன் மூலம் பல பல உயிரினங்களின் மர்மங்களை அறிய முடியும்” என்கிறார் ஆய்வாளர் நைஜல் லார்க்கின்.
பூமியின் ஒவ்வொரு மர்மமும் வெளியாக வெளியாக ஆச்சரியம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

மேலும் செய்திகள்