திருப்பூர் மாவட்டத்தில் பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-09-20 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு பொருள் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி உரிமம் மற்றும் பதிவு சான்று கட்டாயம் பெற வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்யும் உணவு பொருள் தயாரிப்பாளர்கள் ரூ.3 ஆயிரத்துக்கும், விற்பனையாளர்கள் ரூ.2 ஆயிரத்துக்கும், ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக வியாபாரம் செய்யும் அனைத்து உணவு வணிகர்களும் ஒரு ஆண்டுக்கு ரூ.100–ம் கருவூல செலுத்து சீட்டு மூலம் வங்கியில் செலுத்தி www.foodlicensing.fssai.tn.gov.in., என்ற இணையதளம் மூலமாக உரிமம் மற்றும் பதிவு சான்று பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உரிமம் மற்றும் பதிவு சான்று பெற விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து 15 நாட்களுக்குள் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு உரிமையாளர்களின் அடையாள அட்டை நகல், பங்குதாரர் ஒப்பந்த நகல், வாடகை ஒப்பந்த நகல், மின் கட்டண ரசீது, உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை விபரம் ஆகிய விவரங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே உரிமம் மற்றும் பதிவு பெற்றவர்கள் தங்களது காலாவதி தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பாக கருவூல செலுத்து சீட்டின் மூலம் பணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன் இணையதளத்தின் மூலம் உரிமம் மற்றும் பதிவு சான்றினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். உரிமம் மற்றும் பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்