வனப்பகுதியில் புதிய அருவிகள்; ஆற்றில் வெள்ளப்பெருக்கு கூடலூர் பகுதியில் மழை

கூடலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக வனப்பகுதியில் புதிய அருவிகள் தோன்றி உள்ளன. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2017-09-20 22:45 GMT

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பாண்டியாறு, மாயார், ஓவேலி, பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓவேலி வனப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தேவாலா உள்பட பல இடங்களில் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

எனவே சேதம் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி யது. இதனால் கூடலூரில் 82 மி.மீட்டரும், தேவாலாவில் 79 மி.மீட்டரும் மழை அளவு பதிவானது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காரா என்ற இடத்தில் நள்ளிரவில் ராட்சத மரம் ஒன்று ரோட்டில் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விடியற்காலை 4½ மணிக்கு மரம் அகற்றப்பட்டது.

எனவே பல மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. தொடர் மழை காரணமாக கூடலூர் நகர பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஹெலன், பல்மாடி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் நிறைந்து வழிகிறது.

ஓவேலி பார்வுட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஓவேலி வனப்பகுதியில் பசுமையாக காட்சி தரும் மலைகளில் புதிய அருவிகள் வெள்ளியை உருக்கி விட்டது போல் அழகாக காட்சி தருகின்றன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இன்றி வறட்சி நிலவியது. விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது. குடிநீர் பிரச்சினையும் இருந்தது. ஆனால் தற்போது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனிடையே கூடலூர் பகுதியில் நேற்று வெயில் அடித்தாலும், அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

மேலும் செய்திகள்