சேலம் அருகே டயர் வெடித்ததால் விபத்து: தறிகெட்டு ஓடிய லாரி மோதி 2 மூதாட்டிகள் நசுங்கி சாவு

சேலம் அருகே முன்பக்க டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் உதவித்தொகை வாங்க வங்கிக்கு சென்ற 2 மூதாட்டிகள் உடல் நசுங்கி பலியானார்கள்.

Update: 2017-08-21 23:40 GMT

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் காந்திபுரம் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 66). இங்குள்ள சவுடாம்பிகா நகரைச் சேர்ந்த இருசப்பனின் மனைவி தங்கம்மாள் (65). ஆறுமுகமும், இருசப்பனும் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் முனியம்மாளும், தங்கம்மாளும் அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் 2 பேரும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று முதியோர் உதவித்தொகை வாங்க முடிவு செய்தனர். இதற்காக காலை 10.30 மணிக்கு பஸ் மூலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார்கள். அங்கிருந்து சேலம்–நாமக்கல் சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது நாமக்கல்லில் இருந்து ஜவ்வரிசி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென அந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையின் குறுக்கே இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு மறுமார்க்கத்துக்கு சென்ற லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த முனியம்மாள், தங்கம்மாள் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சிக்கி அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், விபத்தில் பலியான 2 மூதாட்டிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த இளஞ்செழியனை (36) கைது செய்தனர். தறிகெட்டு ஓடிய லாரி மோதி உதவித்தொகை வாங்க வங்கிக்கு சென்ற 2 மூதாட்டிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்