கண்ணூர் அருகே முந்திரி தோட்டத்தில் 22 குட்டிகளுடன் ராஜநாகம்

கேரள மாநிலம் கண்ணூர் அருகே தளிபரம்பு கொடியூர் பன்னியன்மலை பச்சமெத்தை பகுதியில் மாத்யூ என்பவருக்கு சொந்தமான முந்திரி தோட்டம் உள்ளது.

Update: 2017-08-03 08:00 GMT
கண்ணூர்,

இந்த தோட்டத்தில் ராஜநாகம் முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இதைபார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

ராஜநாகம் முட்டையிட்டு அடைகாத்து வருவதால் குட்டி வெளியே வரும் வரை யாரும் தொல்லை கொடுக்க வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாம்பு மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினர்.

பாம்பால் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்தனர். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு அந்த பாம்பு அடை காத்த முட்டையில் இருந்து தற்போது குட்டிகள் வெளியே வர தொடங்கின.

ஒவ்வொரு முட்டையாக உடைத்து குட்டிகள் வெளியே வருகின்றன. 30 முட்டைகள் இருந்தன. தற்போது 22 முட்டைகளில் இருந்து குட்டிகள் வெளியே வந்துள்ளன. மீதமுள்ள குட்டிகள் ஒரிரு நாளில் வெளியே வந்துவிடும் என்றும், ஒரளவு வளர்ந்த பின்பு குட்டிகளுடன் ராஜநாகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்