கர்நாடகத்தில், பா.ஜனதா ஆட்சி அமைந்தால் தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்

கர்நாடகத்தில், பா.ஜனதா ஆட்சி அமைந்தால் தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று ஈசுவரப்பா கூறினார்.

Update: 2017-05-03 22:58 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில், பா.ஜனதா ஆட்சி அமைந்தால் தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று ஈசுவரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவரும், மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விவாதங்கள் ஆரோக்கியமானது

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் பா.ஜனதாவில் இருக்கும் குழப்பங்கள் மட்டுமே பகிரங்கமாகியுள்ளன அவ்வளவு தான். கட்சி ஒரு குடும்பத்தை போன்றது. அண்ணன்–தம்பி, கணவன்–மனைவி உறவில் ஏற்படும் சிக்கல் எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது.

விவாதங்கள் ஆரோக்கியமானது. எங்கள் கட்சியில் உட்கட்சி பிரச்சினைகள் பகிரங்கமாகி இருக்கக்கூடாது. ஆனால் அது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் கேட்பவர்கள் யாரும் இல்லை. ஆனால் எங்கள் கட்சியில் சொல்பவர்கள், கேட்பவர்கள் இருக்கிறார்கள். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் எங்களை அழைத்து, குழப்பங்களுக்கு தீர்வு காணுங்கள் என்று கூறினார்.

எடியூரப்பா தீர்வு காணவில்லை

ஆனால் எடியூரப்பா இதுபற்றி எந்த விவாதமும் நடத்தவில்லை. பிரச்சினைக்கு தீர்வும் காணவில்லை. பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பால் பா.ஜனதா தொண்டர்கள் திருப்தி அடைந்துள்ளனர். எங்கள் கட்சியில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு தேசிய தலைவர்கள் மூலம் தீர்வு காண்போம்.

கட்சியின் துணைத்தலைவராக சீனிவாச பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். அவருக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறை உள்ளது. கட்சியை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபடுவார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் உள்ளூர் அடிப்படையில் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு வேட்பாளர்களை கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

தகுதியானவர்களுக்கு பதவி

பா.ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழக்கப்பட வேண்டும். கர்நாடக பா.ஜனதாவில் சில மாதங்களாக பல்வேறு வி‌ஷயங்கள் நடைபெற்று வருகின்றன. எடியூரப்பா தனக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார். இதை கட்சி மேலிட தலைவர்கள் கவனிக்கிறார்கள்.

எங்கள் கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் பற்றி எடியூரப்பா கூறிய கருத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தாலும், சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. வருகிற 8–ந் தேதி இந்த அமைப்பின் மாநாடு ராய்ச்சூரில் நடக்கிறது. அங்கு முக்கிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்