திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேர் கைது

திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் 5 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-03 23:00 GMT

சேலம்,

சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் திருச்செங்கோடு பஸ்நிலைய பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெண் உள்பட 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள், திருச்செங்கோடு ராஜகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது 55), சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த வசந்தி (52) ஆகியோர் என்பதும், முத்துசாமியின் மனைவி ராஜாத்தி ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி 2 பேரிடமும் கொடுத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும் வசந்தி துணி வியாபாரம் செய்யும் போது ராஜாத்தியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் தான் கஞ்சா விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என வசந்தியுடம் கூறியுள்ளார். இதை நம்பி அவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக முத்துசாமி, ராஜாத்தி, வசந்தி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து முத்துசாமி, வசந்தி ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 5 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி முத்துசாமியை மத்திய சிறையிலும், வசந்தியை பெண்கள் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்