கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணாகும் காவிரி குடிநீர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

மணப்பாறையில் காவிரி குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2017-05-03 22:45 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக குளித்தலை பகுதியில் இருந்து மணப்பாறைக்கு காவிரி குடிநீர் வந்து கொண்டு இருக்கிறது. இப்பகுதி மக்களுக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைத்து வந்த காவிரி குடிநீர் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் கிடைத்தாலே அரிது என்றாகி விட்டது.

பருவமழை பொய்த்து விட்ட நிலையில் நீர்நிலைகளும் வறண்டு காணப்படுவதுடன், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, இந்த காவிரி நீரை மட்டுமே மக்கள் நம்பி இருக்கின்றனர்.

வீணாகிறது

மாவட்டம் முழுவதும் குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் கோவில்பட்டி சாலையில் உள்ள பேக்கரி கடை ஒன்றின் அருகே தினமும் காவிரி குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. தண்ணீர் திறக்கும் போதெல்லாம் இந்த இடத்தில் குடிநீர் வீணாகும் நிலை உள்ளது.

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்