முத்தாபுதுப்பேட்டை அருகே மினி லாரிகளை கடத்திய 4 பேர் கைது

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே மினி லாரிகள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-05-02 23:15 GMT

ஆவடி,

லாரிகள் கடத்தல்

ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே உள்ள பாலவேடு, நாசிக் நகரை சேர்ந்த குப்பன் (வயது 35), கரிமேடு சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசாமி ஆகியோரின் மினி லாரிகள் கடந்த மாதம் திருட்டுப்போனது. இந்த சம்பவங்கள் தொடர்பாக முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்தநிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துணை கமி‌ஷனர் சுதாகர் உத்தரவின்பேரில் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை தனிப்படை போலீசார் பாலவேடு 400 அடி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை மடக்கி நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்தவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடினர். பின்னர் போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

சிறையில் அடைப்பு

விசாரணையில், அவர்கள் சென்னை அய்யப்பன்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த கமல்ராஜ் (32), திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் எர்ணாகுளம் குப்பத்தை சேர்ந்த ரபீக் (28), மதுரை பாண்டியன் நகர், வி.கிருஷ்ணகுளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (30), மதுரை பென்னட் நகரை சேர்ந்த முத்துமணி (41) என்பதும், குப்பன், மாரிசாமி ஆகியோரது மினி லாரியை கடத்தியதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் பூந்தமல்லி, மாங்காடு பகுதிகளில் 2 மினி லாரிகளை கடத்தி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கமல்ராஜ், ரபீக், பாலமுருகன், முத்துமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நேற்று காலை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்