இரட்டை இலை சின்னம் முடக்கத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி தான் காரணம்

இரட்டை இலை சின்னம் முடக்கத்துக்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் அணி தான் காரணம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

Update: 2017-05-02 23:15 GMT

கன்னிவாடி,

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் அ.தி.மு.க. (அம்மா) அணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மருதராஜ், உதயகுமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் தான் உள்ளனர். எந்த நிபந்தனையும் இன்றி வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். 97 சதவீத தொண்டர்களும் எங்களிடம் தான் உள்ளனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் ஒரே அணி தான் உள்ளது. அதுவும் அம்மா அணி தான் உள்ளது.

நீதி விசாரணை

ஜெயலலிதா இறந்ததற்கு நீதி விசாரணை வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். ஜெயலலிதா இறந்த பிறகு 3 மாதமாக ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்–அமைச்சராக இருந்தார். அவர் ஏன் நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. நீதி விசாரணை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. அவர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றாலும், இங்குள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய அவை தலைவர் ரெங்கசாமி, பழக்கனூத்து கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடாசலம், ஒன்றிய மீனவரணி செயலாளர் முருகானந்தம், காமாட்சிபுரம் ஊராட்சி கழக செயலாளர் கணேஷ்பிரபு, ஒன்றிய துணை செயலாளர்கள் பிச்சை, சண்முகம், சில்வார்பட்டி ஊ£ராட்சி கழக செயலாளர் ஆரோக்கியசாமி, கிளை கழக செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்