நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

கரூரில் நூதன முறையில் ரூ.1¼லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம்- போலி தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-04-06 23:00 GMT
கரூர்,

கரூரை அடுத்த மணல்மேடு அருகே உள்ள புத்தாம்பூரை சேர்ந்தவர் சண்முகம்(வயது 37). தூத்துக்குடி டி.வி.கே.நகரை சேர்ந்தவர் பிரதீப்(31). இவர்கள் 2 பேரும் சேர்ந்து கடவூர் அருகே உள்ள சிங்கம்பட்டியை சேர்ந்த திருவேங்கடம் என்பவரிடம் ஒரு மடங்கு பணம் கொடுத்தால், அதை 3 மடங்காக மாற்றி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை வாங்கி ஏமாற்றினர். இது குறித்த புகாரின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது அவர்களை கரூர் நகர போலீசார் கைது செய்தனர்.

கைது

இந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட கரூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி(42) தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கரூர் நகர போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் இருப்பது தலைமறைவான சுந்தரமூர்த்தி என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த, ரூ.1 லட்சம், 2 கார், போலி தங்க காசுகள், வெள்ளி பொருட்கள், பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள், ரூபாய் நோட்டு அளவில் வெட்டப்பட்ட பேப்பர் பண்டல்கள், செல்போன், பிரிண்டர் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்