தேனி கோவிலில் ருசிகரம்: பக்தர்களுக்கு பிரசாதமாக மரக்கன்றுகள் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

தேனியில் உள்ள அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Update: 2017-04-06 23:00 GMT

தேனி,

தேனி பழைய டி.வி.எஸ். சாலையில் கண்ணாத்தாள் அம்மன் கோவில் அமைந்து உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில் தேனி நகரில் வாழும் ஏராளமான மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு திருவிழாவில் ருசிகர நிகழ்ச்சியாக, பக்தர்களுக்கு பிரசாதமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வழக்கமாக பிரசாதமாக பூக்கள், பொங்கல், எலுமிச்சைப்பழம் போன்றவை வழங்கப்படும். ஆனால், இந்த முறை நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு வேப்பமரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதற்காக இந்த மரக்கன்றுகளுக்கு கடந்த ஒரு வார காலமாக கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பசுமையை மீட்க

நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இந்த மரக்கன்றுகளை வீடுகளின் முன்போ அல்லது வாய்ப்பு இருக்கும் இடங்களில் நட்டு பராமரிக்குமாறு பக்தர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

இதுதொடர்பாக திருவிழா கொண்டாடும் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினரிடம் கேட்ட போது, ‘தேனி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. முன்பு எல்லாம் 100 டிகிரியை வெயில் தொடுகிறது என்றால் அது அபூர்வம். ஆனால், கடந்த ஒரு மாத காலமாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் அடிக்கிறது. முன்பு இருந்த அளவுக்கு தற்போது மரங்கள் இல்லை.

எனவே தேனியில் இழந்த பசுமையை மீட்பதற்காக கோவிலில் பக்தர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை செய்யப்பட்ட மரக்கன்றுகள் என்பதால் பக்தர்கள் இதனை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்பார்கள் என்று நம்புகிறோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்