குடிநீர் வினியோகம் செய்யக்கோரி விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-06 22:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே கோவிலானூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் ஆழ்துளை கிணற்றில் இருந்து போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு காலி குடங்களுடன் அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள், கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஒன்றிய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும், அதுவரை வாகனம் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்