ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடலூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Update: 2017-03-08 23:00 GMT

கடலூர்,

ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மங்களை கண்டுபிடிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையால் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், சி.பி.ஐ. விசாரித்து உண்மைகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள் காலை 8 மணிக்கே குவிய தொடங்கினர். அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோ.அய்யப்பன் தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது.

முன்னாள் அமைச்சர்

உண்ணாவிரதத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அருள், துரை.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், காமராஜ், நாசர், மாவட்ட துணை செயலாளர் தவமணி சக்கரவர்த்தி, மாவட்ட மீனவரணி செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பு.தா.இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் கங்கா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிராகவும் பேசினர்.

அகன்ற திரையில் ஒளிபரப்பு

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவிச்சந்திரன், ஆதிபெருமாள், காண்டிராக்டர் ரமேஷ், வக்கீல் வேணுபுவனேஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் வாகை.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் எம்.வசந்தகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், முன்னான் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயராயலு, மகளிரணி கம்சலா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் காசி, பன்னீர்செல்வம், முன்னாள் நகர செயலாளர் ராமதுரை உள்பட கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அகன்ற திரையில் ஒளிபரப்பு

உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்தில் அகன்ற திரையில் ஜெயலலிதா மறைந்த போது வெளியிடப்பட்ட புகைப்படங்கள், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படங்கள், ஜெயலலிதாவின் பழைய புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.

உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

போராட்டத்தையொட்டி பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்