சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்

சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று மகளிர் தின விழாவில் சித்தராமையா கூறினார்.

Update: 2017-03-08 21:08 GMT

பெங்களூரு,

சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று மகளிர் தின விழாவில் சித்தராமையா கூறினார்.

மகளிர் தின விழா

கர்நாடக அரசின் கன்னட மொழி வளர்ச்சி, பெண்கள், குழந்தைகள், கலாசாரம் மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு கித்தூர் ராணி சென்னம்மா விருது வழங்கி பேசியதாவது:–

பெண்களில் அதிகமானவர்கள் திறமைசாலிகளாக உள்ளனர். அவர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைத்தால் அவர்களால் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு பறவையின் இரண்டு இறகுகள் போன்றவர்கள். ஒரு இறகு செயல்படாவிட்டாலும் பறவையால் பறக்க முடியாது. அதே போல் இந்த சமுதாய வளர்ச்சியில் இந்த இரண்டு இறகுகள் அதாவது ஆண்கள் மற்றும் பெண்களின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு

பெண் வர்க்கம் ஆரம்பம் முதலே வஞ்சிக்கப்பட்ட வர்க்கம் ஆகும். சமூக, பொருளாதார, அரசியலில் பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெண்களால் ஆண்களுக்கு சமமான அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வர முடியவில்லை. பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்த சமுதாயம் முன்னேற்றம் அடைய முடியும்.

எங்கள் அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் பெண்கள் அரசியல் ரீதியாக வளர முடிகிறது. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இது தொடர்பான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

சுயஉதவி குழுக்களில்...

ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படும் பெண்களுக்கு உதவ சம்ருத்தி மற்றும் தனஸ்ரீ திட்டங்கள் இன்று(நேற்று) முதல் அமலுக்கு வருகின்றன. தெரு வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மகளிர் சுயஉதவி குழுக்களில் 22 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய மாநிலத்தில் 4 மண்டலங்களில் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் மந்திரிகள் உமாஸ்ரீ, கே.ஜே.ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்