கழிவு நீரேற்று நிலையம் அமைக்கக் கூடாது கலெக்டர் அலுவலகத்தில் மனு

பாறைக்கால்மடம் பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கக் கூடாது பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு

Update: 2017-03-08 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருகே உள்ள பாறைக்கால்மடம் பகுதி பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. நாகர்கோவில் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்தின்படி கழிவு நீரேற்று நிலையம் எங்கள் பகுதியில் நிறுவ திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன. இதுபோன்ற கழிவுநீர் திட்டங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில்தான் அமைக்க வேண்டும் என்று சட்ட விதிகள் இருக்கிறது. இருப்பினும் சட்டத்திற்கு புறம்பாகவும், மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் பணிகள் நடக்கின்றன. கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டால் இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பாதிக்கப்படும். எனவே பாறைக்கால்மடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கக் கூடாது, வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறுப்பட்டுள்ளது.

மனு அளிக்க வந்தவர்களுடன் காளி என்பவரும் வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கீழே விழுந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு இரும்பு பொருள் கொடுத்து வலிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்