கண்ணமங்கலம் அருகே காளை முட்டி படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு வேடிக்கை பார்க்க சென்றவருக்கு நடந்த துயர சம்பவம்

கண்ணமங்கலம் அருகே காளை முட்டியதில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2017-03-07 23:00 GMT

கண்ணமங்கலம்,

பள்ளி மாணவன்

கலசபாக்கம் அருகேயுள்ள காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு வனிதா (19) என்ற மகளும், அருண்குமார் (16) அஜித்குமார் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அருண்குமார் ஆதமங்கலம் புதூரில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தான். வார விடுமுறையில் அருண்குமார் கண்ணமங்கலம் அருகேயுள்ள கொளத்தூரில் வசிக்கும் பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 4–ந் தேதி அவர் பாட்டி வீட்டிற்கு சென்றான். 5–ந் தேதி கொளத்தூர் அருகேயுள்ள குப்பம் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. அதனை பார்க்க அருண்குமார் அந்த பகுதி இளைஞர்களுடன் சென்றான்.

சிகிச்சை பலனின்றி சாவு

விழாவில் காளைகள் வேகமாக ஓடி வருவதை இளைஞர்கள், பொதுமக்கள் இருபுறமும் வரிசையாக நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அருண்குமாரும் ஒருபுறம் வரிசையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது வேகமாக ஓடி வந்த காளை ஒன்று திடீரென அருண்குமாரை முட்டி தூக்கி எறிந்தது.

இதில் படுகாயம் அடைந்த அருண்குமார் உடனடியாக சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பரிதாபமாக அருண்குமார் உயிரிழந்தான்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காளை விடும் விழாவை வேடிக்கை பார்க்க சென்ற பள்ளி மாணவன் அருண்குமார் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்