குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தாமிரபரணியில் இருந்து புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தாமிரபரணி

Update: 2017-02-25 22:30 GMT

விருதுநகர்,

குடிநீர் பிரச்சினை

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள்அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் குறைவாகவே கிடைத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து முற்றிலுமாக குடிநீர் வருவது நின்று போனது. இதனை தொடர்ந்து நானும், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசனும் விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களின் ஒத்துழைப்புடன் தாமிரபரணியில் 250 கனஅடி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுத்ததால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து விருதுநகருக்கும், அருப்புக்கோட்டைக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

முறையீடு

எனினும் தற்போது உள்ள நிலையில் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் இதற்கு தீர்வு காண தாமிரபரணியில் இருந்து கூடுதலாக மற்றொரு கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் இதற்காக தூத்துக்குடி மாவட்ட வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் தாமிரபரணியின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குடிநீர் வடிகால்துறை செயலாளர்மற்றும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரிடம் வலியுறுத்தினோம். அவர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தற்போது உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மின்மோட்டார்களை புதியதாக மாற்றி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

கிராமங்கள்....

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1,747 கிராமங்களுக்கு வல்லநாடு, முக்கூடல், சீவலப்பேரி ஆகிய கிராமங்களில் இருந்து தாமிரபரணி தண்ணீர் எடுத்து குடிநீர் வினியோகம் செய்ய ரூ.547 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய யூனியன் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் கிடைத்து வருகிறது.

ஆனால் விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய யூனியன் பகுதியில் உள்ள 755 கிராமங்களுக்கு இன்னும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்கவில்லை. இதற்கான பணிகளை செய்வதற்கு டெண்டர் விட்டதில் பிரச்சினை ஏற்பட்டதால் தற்போது நாங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மறுடெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. எனினும் நகராட்சி பகுதிகளுக்கு கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டம் தேவைப்படுவது தவிர்க்க முடியாதது.

விருதுநகருக்கு ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருதுநகர் பாதாள சாக்கடை திட்டத்தினையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.

மேம்பாலம்

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால கட்டுமானப்பணிகள் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மாற்றப்பட வேண்டி உள்ளதால் தாமதம் ஆகி வருகிறது. அந்த பணியையும் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் தான் அதனால் ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக மானாமதுரை வரையிலான சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான கலந்தாய்வு கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி அமைப்புகளின்அதிகாரிகள் மாவட்ட, மாநில அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு தேவை என்ற அளவில் செயல்பட்டால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்