மலைக்க வைக்கும் மரம் மனிதர்..!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாதவ் பயேங், பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர்.

Update: 2017-02-04 08:11 GMT
சாம் மாநிலத்தை சேர்ந்த ஜாதவ் பயேங், பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவர். அடர்ந்த காட்டிற்குள், சிறிய குடிசை வீட்டிற்குள் மனைவி, குழந்தைகளுடன் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். அதிகாலையில் பறவைகளின் கூச்சலும், விலங்குகளின் சத்தமும் தான் ஜாதவின் துயிலை கலைக்கின்றன. கண்விழித்ததும்... டார்ச் விளக்கை கையில் எடுத்துக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் சென்று விடுகிறார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்ப இரவு நேரமாகி விடுகிறது. அதுவரை காட்டிற்குள் கிடைக்கும் பழவகைகளும், ஆற்று தண்ணீருமே ஜாதவின் உணவாகவும், ஊட்டமாகவும் அமைந்திருக்கின்றன. அப்படி காட்டிற்குள் தங்கி என்னதான் செய்கிறார்..? என்ற ஒற்றை கேள்விக்குள், ஜாதவின் 30 ஆண்டுகால உழைப்பு ஒளிந்திருக்கிறது. அதுவும் 1,360 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கிறது. இதுபற்றி ஜாதவ் சொல்வதை கேட்போம்...

‘‘1979–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாம்புகள், வனவிலங்குகள், மரங்கள் என ஏகப்பட்டவை கிராமத்திற்குள் அடித்து வரப்பட்டன. வனப்பகுதியே நிர்மூலமாகி போனது. அப்போது எனக்கு 16 வயது. வழக்கத்திற்கு மாறான இயற்கை சீற்றத்திற்கு வெப்பமயமாதலும், மரங்களின் பற்றாக்குறையும் தான் காரணம் என்ற கூக்குரல் அப்போதே ஒலிக்க தொடங்கி விட்டது. அந்த சமயத்தில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் என்ற இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூகக்காடுகள்’ வளர்ப்பு திட்டத்தின் படி மரக்கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. பக்கத்து மாவட்டம் என்பதால் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.

பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட, நான் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்க முடிவு செய்தேன். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் நடவு செய்த செடிகளை மறந்து விட்டார்கள். காட்டை எட்டிக்கூட பார்க்கவில்லை’’ என்பவர் செடிகளை பராமரிக்கும் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு மனைவியுடன் ஜோர்ஹாட் வனப்பகுதியிலேயே தங்கி விட்டார்.

‘‘ஆரம்பத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டிருந்த மூங்கில் செடிகளை பராமரிப்பது சலிப்பை ஏற்படுத்தியது. அதனால் இன்னும் சில மரவகைகளை நட்டு வளர்க்கலாம் என்ற எண்ணத்தில் பிற மரங்களையும் வளர்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருந்த மணல் பரப்பு அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால், நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து வந்து மணல் திட்டில் விட்டு வளர்த்தேன். எறும்புகள் மண்ணின் தன்மையை நல்லதாக மாற்ற... அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் வளர்க்க ஆரம்பித்தேன். இப்படியே 30 ஆண்டுகள் ஓடோடி விட்டன’’ என்று ஆர்ப்பாட்டமில்லாமல் பேசும் ஜாதவை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சந்தித்து வாழ்த்தியதுடன், பாரம்பரிய பரிசான மூங்கில் தொப்பியையும் அணிவித்திருக்கிறார்.

‘‘2008–ம் ஆண்டு வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காட்டை அதிசயத்துடன் சுற்றி பார்த்தவர்கள், குடிசை வீட்டை கண்டுபிடித்து என்னை தேடி வந்து விட்டார்கள். அவர்களிடம் 1,360 ஏக்கர் பரப்பளவில் காடு உருவான கதையை சொல்லி முடிப்பதற்கு ஒரு நாள் தேவைப்பட்டது’’ என்று புன்னகைக்கும் ஜாதவிற்கு 2015–ம் ஆண்டு ‘பத்ம ஸ்ரீ’ விருது தேடி வந்திருக்கிறது. இவரது குடிசைக்கு வந்த அரசு அதிகாரிகள், ஜாதவையும், அவரது மனைவி பினிட்டாவையும் டெல்லிக்கு அழைத்து சென்று ராஜ உபசரிப்பு வழங்கி இருக்கிறார்கள். பத்மஸ்ரீ விருது ஜாதவின் மரம் வளர்க்கும் முயற்சிக்கு கூடுதல் கவுரவம் தேடி கொடுத்திருக் கிறது.

“இந்தியா முழுக்க மரங்களை நடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தனி ஒருவனால் அது சாத்தியப்படாது என்பதையும் புரிந்து கொண்டேன். முதல்கட்ட முயற்சியாக என்னுடைய இருமகன்களையும் தயார்படுத்தி வருகிறேன். என்னுடைய ஆசையை அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள்’’ என்று பெருமைப்படும் ஜாதவ், முலாய் காட்டிற்குள் மகன்களுக்கு இயற்கை பாடமும் சொல்லிக் கொடுக்கிறார். மரங்களை எப்படி வளர்ப்பது, வாடிய செடி கொடிகளை எப்படி துளிர்க்க செய்வது, விலங்குகளை எப்படி அரவணைப்பது, உண்ண தகுந்த பழவகைகள் எவை... என ஏராளமான வி‌ஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும்   வருமானத்திற்காக  மாடுகளை வளர்த்து, அதன் பாலை  விற்று குடும்ப செலவையும் பார்த்து கொள்கிறார்.

‘‘ காட்டு விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன. 100–க்கும் மேற்பட்ட யானைகள் 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கிறது. இவைதவிர சில அபூர்வ வகை உயிரினங்களையும் பார்க்க முடிகிறது’’ என்பவர் தன்னுடைய உழைப்பு விலங்குகளின் சொர்க்கபுரியாக மாறியிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார்.

மேலும் செய்திகள்