பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு: கேரள சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உள்ள கேரள சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-02-03 22:15 GMT
தடுப்பணை கட்ட எதிர்ப்பு

தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவுக்குள் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வரும் பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை உள்பட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதில் தேக்குவட்டை என்ற இடத்தில் தடுப்பணை கட்டும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் ஆகிய கட்சிகள் சார்பில் கோவை 100 அடி சாலை 9–வது வீதியில் உள்ள கேரள சமாஜ

அலுவலகத்தை

முற்றுகையிடும் போராட்டம் நேற்றுக்காலை நடைபெற்றது. இதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் 100 அடி சாலையில் கூடினார்கள். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

முற்றுகையிட முயன்றவர்கள் கைது

இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மாவட்டத் தலைவர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை தலைவர் குரு, தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த ஆதி தமிழன் ஆகியோர் தலைமையில் சிலர் 100 அடி சாலையிலிருந்து புறப்பட்டு கேரள சமாஜஅலுவலகத்தை

முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே ஆர்ப்பாட்டக்காரர்கள் 100 அடி சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டமாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை கேரளா நிறுத்தும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்