கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம், தாது உப்புகள் வழங்க ரூ.3.16 கோடி நிதி ஒதுக்கீடு தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் மற்றும் தாது உப்புகளை வழங்க ரூ.3 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-02-03 22:45 GMT

தர்மபுரி,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மானிய விலையில் தீவனம்

தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கால்நடைகளுக்கு உலர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தாதுஉப்புகள் வழங்க தமிழக அரசு ரூ.3 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் உலர் வைக்கோல் தீவனத்தை மானிய விலையில் வழங்க தமிழக அரசு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 26 லட்சமும், 64 ஆயிரம் மாடுகளுக்கு தாது உப்புகள் வழங்க ரூ.90 லட்சமும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ வைக்கோல் ரூ.2 என்ற விலையில் ஒரு மாட்டிற்கு ஒரு நாளுக்கு 3 கிலோ வீதம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு வாராந்திர தேவை அடிப்படையில் வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக 2 அல்லது 3 மாதங்களுக்கு தீவனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தீவனம் வழங்க 21 இடங்களில் உலர் தீவன மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் ஓரிரு வாரங்களில் விடப்பட்டு விவசாயிகளுக்கு தீவனம் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மையத்திற்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பசுந்தீவன பயிர்

தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் 500 ஏக்கர் நிலத்தில் பசுந்தீவன பயிர் வளர்ப்பு திட்டம் செயல்பட உள்ளது. இதற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கால்நடைகளுக்கான பசுந்தீவன சோளப்பயிர் உற்பத்தி செய்ய 50 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படும். நீர்பாசன வசதியுள்ள நிலமுள்ள விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் தீவன சோளப்பயிர் சாகுபடி செய்திட ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலவாகும். இதில் அரசு 50 சதவீத மானியமாக ரூ.2 ஆயிரம் வழங்கும்.

விவசாயிகள் பயிரிடும் பசுந்தீவனத்தில் சொந்த பயன்பாட்டிற்கு போக மீதமுள்ளதை மார்க்கெட்டில் விவசாயிகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த கால்நடை வளர்ப்போருக்கு விற்பனை செய்யலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்