பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை 10–ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-02-03 21:30 GMT

நாகர்கோவில்,

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், பாசன வாய்க்கால்கள், சாலையோரங்கள் மற்றும் தனியார் நிலங்களில் இயற்கையாகவே வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், அவற்றை அகற்றிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

அதாவது, அரசு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொண்டு சீமைக்கருவேல் மரங்களை வேருடன் அகற்றிட வேண்டும். தனியார் நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் வளரும் சீமைக்கருவேல மரங்களைப் பொறுத்த வரை இம்மரங்கள் தானாகவே வளரக் கூடியவை என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதாலும், சுகாதார பாதிப்புகள் உண்டாக்குவதாலும் இவற்றை வேருடன் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொது மக்களுக்கு இதனை விளம்பரபபடுத்துமாறும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

எனவே குமரி மாவட்டத்தில் உள்ள பட்டாதாரர்கள் அவர்களுடைய நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருந்தால், அவற்றை வேருடன் வெட்டி அப்புறப்படுத்துமாறும், இம்மரங்களை வளர்ப்பதற்கு அரசு ஆதரவு ஏதும் இல்லையெனவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க நில உடமைதாரர்கள் 10–2–2017–ந் தேதிக்குள் அகற்றிட வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் அரசு இப்பணியை செய்து முடித்து அதற்கான செலவுத்தொகையை இரண்டு மடங்காக பட்டாதாரர்களிடம் வசூல் செய்ய நேரிடும் எனவும், அதனால் பட்டாதாரர்கள் இப்பணியை உடனே மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்