மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 2-ந் தேதி தொடங்குகிறது

மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2017-01-26 19:42 GMT
வடவள்ளி,

மருதமலை கோவில்

கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகபெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று கோவிலில் தேரோட்டம் நடைபெறும். இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள்.

அது போல் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 2-ந்தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. பின்னர் 3-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றமும் மற்றும் மாலை 5 மணிக்கு சாமி திருவீதி உலாவும், 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, மாலையில் யாக சாலை ஹோமங்களும் நடைபெறுகிறது.

தேரோட்டம்

9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் தைப்பூச திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வெள்ளை யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா, காலை 11.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடக்கின்றன. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளுகிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

மறுநாள்(10-ந் தேதி) மாலை 5 மணிக்கு தெப்பத்திருவிழா, 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம், மாலை 4.30 மணிக்கு கொடி இறக்குதல், 12-ந் தேதி வசந்த விழாவுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்