ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி ரெயில்வே ஒப்பந்ததாரர் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட ரெயில்வே ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-01-05 21:31 GMT
திருவள்ளூர்,

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட ரெயில்வே ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

ரெயில்வேயில் வேலை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சின்னபொந்தலிபுரம் ஏ.எஸ்.என் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ் என்கிற போத்தாலு டில்லி வெங்கடேஸ்வரராவ் (வயது 48). இவர் ஆந்திர மாநில ரெயில்வேயில் உதவி ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

அப்போது அங்கிருந்த குருக்கள் பிரகாஷ் என்பவரிடம், தான் ஆந்திர மாநில ரெயில்வேயில் பணிபுரிந்து வருவதாகவும், உயர் பதவியில் இருப்பதாகவும் கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

போலி ஆணை

தற்போது ரெயில்வேயில் காலி இடங்கள் உள்ளன. அதற்காக ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது. உயர் அதிகாரிகள் அனைவரும் எனக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள். எனவே ரெயில்வே வேலை செய்ய ஆட்கள் இருந்தால் கூறுமாறு கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பிரகாஷ் குருக்கள் தன்னுடைய மகனுக்கும் , உறவினர்களுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருமாறு அணுகியுள்ளார்.

மேலும் திருத்தணியை சேர்ந்த அய்யப்பன் உட்பட அரக்கோணம், பூந்தமல்லி , சென்னையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 36 பேர் வெங்கடேஸ்வரராவை அணுகி தங்களுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் 36 பேரும் வெங்கடேஸ்வரராவிடம் ரூ.1 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்த 2014-ம் ஆண்டு வழங்கி உள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேஸ்வரராவ் போலியான முத்திரையை பயன்படுத்தி ரெயில்வேயில் சேருவதற்கான ஆணையை மேற்கண்டவர்களிடம் வழங்கி உள்ளார். வெங்கடேஸ்வரராவுக்கு உடந்தையாக மேலும் 5 பேர் இருந்தனர். பின்னர் அவர்கள் அந்த ஆணையை சம்பந்தப்பட்ட ரெயில்வே துறையில் காண்பித்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது.

கைது

இதை தொடர்ந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் வெங்கடேஸ்வரராவை அணுகி இது சம்பந்தமாக கேட்டனர். வெங்கடேஸ்வரராவ் அவர்களிடம் எந்த பதிலும் சொல்லாமல் தனது நண்பர்களுடன் தலைமறைவாகி விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட 36 பேரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர் . போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு காதர்பாஷா, இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சைமன்துரை, வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வெங்கடேஸ்வரராவ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பதுங்கி இருந்த வெங்கடேஸ்வரராவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்