ஜெயலலிதாவின் 30-ம் நாள் நினைவு அஞ்சலி: கோவில்பட்டியில், அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 30-ம் நாள் நினைவு அஞ்சலி மவுன ஊர்வலம் நடந்தது.

Update: 2017-01-05 20:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 30-ம் நாள் நினைவு அஞ்சலி மவுன ஊர்வலம் நடந்தது.

மவுன ஊர்வலம்


கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 30-ம் நாள் நினைவு அஞ்சலி மவுன ஊர்வலம் நேற்று காலையில் தொடங்கியது. மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், செய்தி விளம்பர துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரமாண்ட ஜெயலலிதா படம்

ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக புறப்பட்டனர். மெயின் ரோடு, தெற்கு பஜார் வழியாக கோவில்பட்டி காந்தி மைதானத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு சுமார் 20 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிரமாண்ட திருவுருவ படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் சுற்று பிரகாரத்தில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜ், மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் சின்னத்துரை, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன் (கோவில்பட்டி), செல்வகுமார் (கயத்தாறு), ரூபம் வேலவன் (விளாத்திகுளம்), தர்மராஜ் (ஓட்டப்பிடாரம்), முருகன் (ஸ்ரீவைகுண்டம்), மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஈசுவர பாண்டியன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன், வக்கீல் அணி சங்கர் கணேஷ் உள்பட திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்