"சேப்பாக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்" - சேப்பாக்கம் மைதானத்தின் சிறப்புகள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தின் வரலாற்றுச் சிறப்புகள்.;

Update:2021-02-04 17:16 IST
சென்னை,

தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வோடு கலந்திருக்கும் மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம்.

கிரிக்கெட் ரசிகர்களின், பல பசுமை மாறா நினைவுகளை சுமந்திருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில்தான், இந்தியா - இங்கிலாந்து அணிகள், வருகிற 5-ம் தேதி களம் காண உள்ளன. அதுவும், 5 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் 1916-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். இங்கு கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், இங்கிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்கு முதல் வெற்றியை வழங்கிய மைதானம் என்ற பெருமை சேப்பாக்கம் மைதானத்துக்கு உண்டு. கடந்த 1952-ம் ஆண்டு இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை இந்த மைதானத்தில்தான் பதிவு செய்தது இந்தியா.

இதேபோல், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கும் சேப்பாக்கம் மைதானத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சேப்பாக்கம் மைதானத்தில், கடைசியாக கடந்த 2016-ஆம் ஆண்டு, டெஸ்ட் போட்டி நடந்தது. இங்கிலாந்துடன் நடந்த, இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 759 ரன்களைக் குவித்தது இந்தியா. இதுவே, ஒரு இன்னிங்சில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
  
இதே மைதானத்தில் 1977-ஆம் ஆண்டு, இங்கிலாந்துடன் வெறும் 83 ரன்களுக்கு, இந்தியா சுருண்ட வரலாறும் உண்டு. சுமார் 50 ஆயிரம் இருக்கைகளை கொண்டுள்ள சேப்பாக்கம் மைதானம், சுழற்பந்து வீச்சாளர்களின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. 

இந்த மைதானத்தில், பல முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள், தங்களது மாயாஜால சுழற்பந்துவீச்சால் எதிரணி வீரர்களை திணறடித்து உள்ளனர். இது மட்டுமின்றி, முன்னாள் கேப்டன் தோனியின் ஒரே டெஸ்ட் போட்டி இரட்டை சதம் இந்த மைதானத்தில் தான் அடிக்கப்பட்டது. இந்திய வீரர் கருண்நாயர், மூன்று சதம் அடித்ததும் சேப்பாக்கத்தில் தான். 

இவ்வாறு, வரலாற்று பெருமைகளை கம்பீரமாக தாங்கி நிற்கும் சேப்பாக்கத்தில்இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் நடந்து உள்ளன. இதில் 14 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் ஒன்பது முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 5 போட்டிகளில் இந்தியாவும், மூன்றில் இங்கிலாந்தும் வென்ற நிலையில், ஒரு போட்டி சமனில் முடிந்தது. 

தற்போது, இந்திய, இங்கிலாந்து அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளில், இங்கு விளையாடவுள்ள நிலையில், 2-ஆவது போட்டிக்குதான் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல் போட்டியில் கிளப் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டு உள்ளது.  போட்டியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டாலும் சரி... மறுக்கப்பட்டாலும் சரி. சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தால், அது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாதான்.

மேலும் செய்திகள்