இன்று தேய்பிறை அஷ்டமி.. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பைரவரை வழிபடுங்கள்

வீட்டில் பைரவாஷ்டகம் சொல்லியும், பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.

Update: 2024-09-25 00:30 GMT

தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவ வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள் சாத்தி பைரவரை வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள். மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாகப் படைப்பார்கள்.

வீட்டில் பைரவாஷ்டகம் சொல்லியும், பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம். அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையில், விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்வதன்மூலம், காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும், வீட்டின் தரித்திரத்தை பைரவர் போக்கி அருள்வார் என்பது நம்பிக்கை.

அவ்வகையில் தேய்பிறை அஷ்டமியான இன்று (25.9.2024) புதன்கிழமை ராகுகால வேளையில் (மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள்) விளக்கேற்றி வழிபடலாம். 

வீட்டில் பைரவர் படம் இருந்தால் அந்த படத்திற்கு மாலை சாற்றி, பைரவருக்கு உரிய அஷ்டோத்திரம் சொல்லி அவரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். பைரவர் படம் இல்லை என்றால் விளக்கையே பைரவராக பாவித்து வழிபடலாம். மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியவில்லை என்றால் எளிமையாக, "ஓம் பைரவாய நமஹ" அல்லது "ஓம் பைரவாய போற்றி" என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். அவருக்கு நைவேத்தியமாக காரமான புளியோதரை, தோல் நீக்காத கருப்பு உளுந்தில் மிளகு போட்டு செய்யக் கூடிய வடை ஆகியவற்றை படைத்து வழிபடலாம். வெல்லம் கலந்து செய்யப்படும் சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்