சகல பாவங்கள் போக்கும் ஸ்ரீவாரி புஷ்கரணி
வராகசாமியை தரிசித்தால் அனைவருக்கும் செழிப்பு கிடைக்கும்;
சகல பாவங்கள் போக்கும் ஸ்ரீவாரி புஷ்கரணியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்று புனித நீராடலாம்,
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலியுகத்தின் சர்வலோகப் பிரபுவான வெங்கடேஸ்வரசாமி உலகம் முழுவதும் உள்ள தனது பக்தர்களை காக்கும் நோக்கத்துடன் திருமலையில் வீற்றிருக்கிறார். அசுரர்களை ஒழிக்கும் தெய்வீகப் பணியை முடித்த மகாவிஷ்ணு, ஸ்வேத வராக (காட்டுப்பன்றி) அவதாரத்தில் வெங்கடாசல மலையில் வசித்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போதும் கோவில் புஷ்கரணியின் மேற்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வராகசாமி வசிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வராகசாமியை தரிசித்தால் அனைவருக்கும் செழிப்பு கிடைக்கும். வராகசாமியின் தோற்றம் ஆரோக்கியத்தின் சின்னமாக விளங்குகிறது.
அப்போதில் இருந்து திருமலை 'ஆதி வராக ஷேத்திரம்' என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் வராகசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின்னரே, வெங்கடேஸ்வரசாமியை தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்ல வேண்டும். ஸ்ரீவாரி புஷ்கரணி வராக புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புனித தீர்த்தம் 'ஸ்வயம் வ்யக்தா' (சுயம்புவாக உருவானது) என்று கூறப்படுகிறது. அதன் முக்கியத்துவம் வராக-மார்க்கண்டேய-வாமன-ஸ்கந்த-பிரம்மா மற்றும் பவிஷ்யோத்தர புராணங்கள் உள்பட பல இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள 3 கோடி தீர்த்தங்களும் சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
வராக சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில், மகா விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தில் இருந்து கருடனால் சுவாமி புஷ்கரணி கொண்டு வரப்பட்டதாகும். வராக புஷ்கரணி சுவாமி புஷ்கரணி என்று பிரபலமாகி, குபேர தீர்த்தம், காலவ தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம் மற்றும் சரஸ்வதி தீர்த்தம் ஆகிய ஒன்பது புனித தீர்த்தங்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.
ஆகையால், ஸ்ரீவாரி புஷ்கரணி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினால் சகல பாவங்களும் போக்கி, அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந்தேதி நடக்கும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று புனித நீராடலாம்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.