சரஸ்வதி தேவி அருள்பாலிக்கும் ஆலயங்கள்

இந்த ஆண்டின் சரஸ்வதி பூஜை நாளை மறுநாள் (11-10-2024) கொண்டாடப்பட உள்ளது.

Update: 2024-10-09 09:14 GMT

இந்து சமயத்தின் கல்விக்கான தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகிறார். முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவரான சரஸ்வதி, கல்வியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த தேவியை வணங்குபவர்களுக்கு, கல்வியில் நாட்டம் உண்டாகும். புத்திக்கூர்மை, சொல் வன்மை, கலைகளில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த தேவியின் வழிபாட்டிற்கு உரிய நாள் ஆயுத பூஜை என்று சொல்லக்கூடிய சரஸ்வதி பூஜை. இந்த ஆண்டின் சரஸ்வதி பூஜை நாளை மறுநாள் (11-10-2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய சில ஆலயங்களை பார்ப்போம்.

பிரம்ம வித்யாம்பிகை

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், 'பிரம்ம வித்யாம்பிகை' என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார். இந்த அன்னையை, சரஸ்வதியின் வடிவமாகவே கருதுகிறார்கள். நவக்கிரகங்களில் மனிதர்களது புத்தியை இயக்கும் முக்கிய கிரகம், புதன். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வி, ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. திருவெண்காடு தலத்தில் புதன் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. எனவே இந்த கோவிலில் வழிபடுவது, கல்வி வளம் அளிப்பதுடன் புத்தியையும் வலுவாக மாற்றுகிறது. சீர்காழியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

ஓலைச் சுவடியுடன் சரஸ்வதி

திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உத்தமர்கோவில் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு பிச்சாண்டவர் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான், பிச்சாடனராக வந்து தோஷம் நீங்கப்பெற்ற இடம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்பது பலரும் அறிந்த விஷயம்தான். அதே நேரம் தனி சன்னிதிகளில் பிரம்மன் வீற்றிருக்கும் ஆலயங்கள் பல உள்ளன. அப்படி ஒரு ஆலயம்தான், பிச்சாண்டவர் கோவில். பூவுலகிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற பிரம்மனின் ஆசையை, இத்தல இறைவன் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. இங்கு பிரம்மா, சரஸ்வதிக்கு சன்னிதிகள் உள்ளன. இத்தலத்தில் `ஞான சரஸ்வதி' என்ற பெயரில் வணங்கப்படும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. ஓலைச் சுவடியும், ஜெப மாலையும் மட்டுமே உள்ளன.

வீணை இல்லாத சரஸ்வதி


திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் உள்ளது வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை, நான்கு வேதங்களும் வணங்கியதாக ஐதீகம். இவ்வாலய அம்பிகையின் திரு நாமம், 'யாழைப் பழித்த மொழியம்மை' என்பதாகும். இவ்வாலய பிரகாரத்தில் பிரமாண்ட தோற்றத்தில் சரஸ்வதி வீற்றிருக்கிறார். இந்த சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. சுவடியை மட்டும் கையில் ஏந்தியிருக்கிறார். இவ்வாலய அம்மனின் குரல், யாழை விட மிகவும் இனிமையானது என்பதால், இங்கே சரஸ்வதி வீணை இன்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாலயத்திலும் கல்வி கேள்விகளில், கலைகளில் வெற்றி பெற நினைப்பவர்கள் வழிபாடு செய்யலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

ஹயக்ரீவரும் சரஸ்வதியும்


திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, தாடிக்கொம்பு திருத்தலம். இங்கு சவுந்தரராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மண்டூக மகரிஷி தனது சாபம் நீங்க தவம் செய்த திருத்தலம் இதுவாகும். இங்கே கல்வி அருளும் தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும், தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் கலந்த நைவேத்தியத்தை படைத்தும், ஏலக்காய் மாலை அணிவித்தும் வழிபடுவது, சிறப்பான பலனைத் தரும். சரஸ்வதி பூஜையன்று இத்தல சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்