சமயத் தொண்டு மட்டுமின்றி சமூகத் தொண்டிலும் ஆர்வம் காட்டிய மகான்

தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட பஞ்சமர்களை திருக்குலத்தார் என மதிப்புடன் ராமானுஜர் குறிப்பிட்டார்.;

Update:2024-09-08 13:28 IST

வைஷ்ணவ துறவியான ராமானுஜர், சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர். கோவில் வழிபாட்டில் தமிழை அறிமுகப்படுத்தி மதத்தை சாமானியர்களிடம் கொண்டு சேர்த்தவர். சமயத் தொண்டில் மட்டுமின்றி சமூகத் தொண்டிலும் ஆர்வம் காட்டினார்.

ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து தம் சிஷ்யர் சிலரோடு தற்போதைய கர்நாடகாவின் மேலக்கோட்டை பகுதியில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்த பகுதி மக்களுக்கு, நன்னெறிக் கோட்பாடுகளை உபதேசித்து வைணவர்கள் ஆக்கினார்.

ஒவ்வொருவரிடமும், குறிப்பாக ஏழை மக்கள் மீது தீராத அன்பு செலுத்தியவர் ராமானுஜர். தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட பஞ்சமர்களை "திருக்குலத்தார்" என மதிப்புடன் குறிப்பிட்டார்.

இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டார். "எந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன" என்றார்.

'வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள். இவ்விதம் வைணவராகி, தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்களை, அவர்களுடைய பண்டைக் குலத்தைக் குறிப்பிட்டுப் பேசுவது மகாபாவம்' என்றும் ராமானுஜர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்