அபிஷேக தேனை உறிஞ்சும் அற்புத பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபடலாம்

பிரளயத்தில் இருந்து ஊரைக் காத்ததால் திருப்புறம்பியம் கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.

Update: 2024-08-30 06:16 GMT

விநாயகர் சதுர்த்தி வருகிற 7-ம் தேதி (7.9.2024) கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் வழிபாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. விநாயகர் கோவில்களிலும் விழாவிற்கான ஏற்படுகளை செய்யத் தொடங்கி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் பூஜை செய்வதுடன், அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது நல்ல பலனைத் தரும்.

அந்த வகையில், கோவில் நகரமான கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சதுர்த்தி மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயம் காத்த விநாயகரை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கலாம்.

கும்பகோணத்துக்கு வட மேற்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகர் உள்ளார்.

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர், இன்னம்பர் வழியாக இந்த தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் கடல் பொங்கி எழுந்து உலகை அழிக்கும் காலமே 'ஊழி' எனப்படும். இதை, 'யுகப்பிரளய' காலம் என்றும் அழைப்பார்கள். அப்போது தோன்றும் பெரும் ஊழிக் காற்றாலும், தீயாலும் உலகம் அழிக்கப்படும்.

பின்னர், உலகத் தோற்றத்துக்கான தாண்டவத்தை மேற்கொள்வார் இறைவன். இவ்வாறு ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் துவங்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவபெருமான் ஆடுவது பிரளய தாண்டவம் எனப்படும்.

சிவபெருமானைப் போலவே விநாயகரும் பிரளயத்தில் இருந்து மக்கள் அனைவரையும் காத்தருளுகிறார்.இவரை பிரளயம் காத்த விநாயகர் என்பார்கள். இதே பெயருடன் இவர் அருளும் இடம்தான் திருப்புறம்பியம். புறம்- வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம். அந்த பெயர் புறம்பியம் என்று மருவிவிட்டது. அதாவது பிரளயத்துக்கு புறம்பாய் இருந்ததால் இப்பெயர் வந்தது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புறம்பியப் போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினான். இந்தத் தலத்தில் அவன் திருப்பணி செய்த கோவிலுக்கு ஆதித்தேச்வரம் என்று பெயர். செட்டிப் பெண் ஒருத்திக்காக இந்தத் தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடைப்பள்ளி அனைத்தும் மதுரையில் சாட்சி சொன்னதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

எனவே, இறைவன் பெயர் ஸ்ரீ சாட்சிநாதர் எனும் சாட்சிநாதேஸ்வரர். அம்பிகை பெயர் கரும்பன்ன சொல்லி.

ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு விநாயகரை வழிபட்டார். பிரளயத்தில் இருந்து ஊரைக் காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.

கோவிலின் மகா மண்டபத்துக்கு வெளியே தென்கிழக்கில் பிரளயம் காத்த விநாயகர் கோவில் உள்ளது. வெண்மையுடன் சந்தன நிறம் கொண்ட திருவுருவம். இவரது திருமேனியில் சங்கும் சிப்பியும் காணப்படுகின்றன.

அடுத்த வாரம் (7.9.2024) விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகருக்கு குடம் குடமாக தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சி விடுவார். இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுவதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம் நடக்கிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional

Tags:    

மேலும் செய்திகள்