காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் 2-ந்தேதி தொடங்குகிறது

14-ந்தேதி ஊஞ்சல் சேவையுடன் நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது.

Update: 2024-09-30 01:17 GMT

காஞ்சிபுரம்,

புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி அழகிய பொம்மைகளால் கொலு வைத்து அலங்கரிக்கப்பட்ட கொலு மண்டபத்திற்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவம் வருகிற 2-ந்தேதி காலையில் சண்டி ஹோமத்துடனும், மாலையில் வாஸ்து சாந்தி பூஜையுடனும் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தினந்தோறும் உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து நவராத்திரி கொலு மண்டபத்துக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எழுந்தருள செய்து சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது.

நவராத்திரி உற்சவ நாட்களில் கோவிலில் நவஆவர்ண பூஜை, கன்யா பூஜை, சுவாஷினி பூஜை போன்றவையும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வருகிற 10-ந்தேதி சூரசம்காரம் நடைபெறுகிறது. 11-ந்தேதி சரஸ்வதி பூஜையையொட்டி காமாட்சி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14-ந்தேதி ஊஞ்சல் சேவையுடன் நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தானீகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்